உங்களை நினைவில் கொள்ள வேண்டுமா? முதல்வர் சித்துவுக்கு விஜயேந்திரா கேள்வி!

பாகல்கோட்: ''ஆட்சி, அதிகாரத்தில் இருந்து சென்ற பின், உங்களை மக்கள் ஏன் நினைவில் கொள்ள வேண்டும்,'' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, விஜயேந்திரா கேள்வி எழுப்பி உள்ளார்.

பாகல்கோட்டில் நேற்று நடந்த, 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை'யில் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:

சித்தராமையா முதல்வரான பின், மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை; ஹிந்து பெண்களுக்கு எதிரான, 'லவ் ஜிகாத்'. பசுவதை அதிகரித்தபடி செல்கிறது.

எடியூரப்பா முதல்வராக இருந்த போது, விவசாயிகள், தங்கள் நிலத்தில் மின்மாற்றி நிறுவ 25,000 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால் தற்போது 2.50 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு, ஐந்து ஆண்டு முதல்வராக இருந்தபோது, சித்தராமையா என்ன சாதித்தார். லிங்காயத் சமூகத்திற்கு தனி மதம் என்று, அவர் தீ மூட்டியதை நாம் நினைவில் கொள்ள வேண்டாமா.

அரசு பணி ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு உள்ளது. இது யாருடைய அப்பா வீட்டு பணம். முஸ்லிம்களுக்கு வசதியை வழங்கி ஹிந்துக்களை அவமதிக்கின்றனர். ஹிந்துக்களில் ஏழைகள் இல்லையா. சித்தராமையா, நீங்கள் எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. ஏழைகள், விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது முக்கியம். ஆட்சி, அதிகாரத்தில் இருந்து நீங்கள் சென்ற பின், மக்கள் எதற்காக உங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் மக்களை பிரித்து உள்ளீர்கள். பா.ஜ., மட்டும் இல்லை என்றால் பட்டியல் ஜாதியினருக்கு 17 சதவீதம்; பழங்குடியினருக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு இருக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் பீதி



பா.ஜ.,வின் இந்த யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதால், சித்தராமையாவுக்கு பீதி ஏற்பட்டு உள்ளது.

அவர் வெளியிட்ட 'எக்ஸ்' வலைதள பதிவில், 'பா.ஜ.,வுக்கு உண்மையில் மக்கள் நலனில் அக்கறை இருந்தால், மக்கள் விரோத யாத்திரை என்ற பொய் நாடகத்தை நிறுத்த வேண்டும். நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசே நேரடி பொறுப்பு.

'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பின்பக்கம் வழியாக ஆட்சிக்கு வரும் பா.ஜ.,வுக்கு மக்கள் படும் கஷ்டம் பற்றி தெரியாது' என கூறி உள்ளார்.

Advertisement