கூட்டு பலாத்காரம் 'ரீல்' விட்ட பெண் மருத்துவ பரிசோதனையில் அம்பலம்

ஹாவேரி: கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க, தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக, 'கதை' கட்டிய பெண் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

ஹாவேரி மாவட்டம், பேடகி தாலுகாவின் பெட்டத மல்லேஸ்வர நகரில் வசிக்கும் பெண் பீராம்பி, 35. இவர் நேற்று காலை பலத்த காயங்களுடன், பேடகி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தன்னை நான்கைந்து பேர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார்.

அவரது முகம், கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதை கவனித்த போலீசார், அப்பெண்ணை சமாதானம் செய்தனர். ஹாவேரி மாவட்ட மருத்துவனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவில்லை என்பது தெரிந்தது.

அதன்பின் அப்பெண்ணை தீவிரமாக விசாரித்த போது, 'நான் பலாத்காரத்துக்கு ஆளாகவில்லை. கடன் விஷயத்தில் பரிதா பானு, குட்டப்பா என்பவரின் மருமகளுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னை தாக்கினர். அவர்களை மாட்டிவிட பலாத்கார கதை கட்டினேன்' என்பதை ஒப்புக்கொண்டார். போலீசார், பீராம்பி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பி., அம்ஷுகுமார் அளித்த பேட்டி:

சில ஊடகங்களில், பெண் மீது கூட்டு பலாத்காரம் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை. பாலியல் தொல்லைக்கும் ஆளாகவில்லை. அது தனிப்பட்ட காரணத்தால் நடந்த தகராறு.

பரிதா பானு, நபிவுல்லா உட்பட மூவர் தன்னை தாக்கியதாக அப்பெண் கூறியுள்ளார். போலீசார் தீவிரமாக விசாரித்த போது, பலாத்காரம் நடக்கவில்லை என்பதை கூறினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் தன்னை தாக்கியதாக சிலர் மீது, புகார் அளித்துள்ளார். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement