நடிகர் ஸ்ரீ குறித்து வதந்திகளை பரப்பாதீங்க; குடும்பத்தினரின் அறிக்கையை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகர் ஸ்ரீராம் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ. அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் நின்று விடவே அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார்.

இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக நடித்த இறுகப்பற்று' படத்தில் சம்பளம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக அவர் மனஅழுத்தம் ஆனதாகவும், அதனால் இப்படி ஆகிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்பினர்.

இந்த நிலையில், உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன நடிகர் ஸ்ரீராம் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஸ்ரீ நடித்த மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனராஜ் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில்; நடிகர் ஸ்ரீராம் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்பதை அவரது நண்பர்கள் மற்றும் மீடியாவிற்கு தெரியப்படுத்துகிறோம். அவர் உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உதவும் விதமாக, ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். வியூகம் மற்றும் தவறான தகவல்களால் மிகவும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே, நடிகர் ஸ்ரீ குறித்து வதந்தியான, ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தற்போதைய நிலையை உணர்ந்து, நடிகர் ஸ்ரீ உடல்நிலை தொடர்பாக சமூகவலைதளங்களில் போடப்பட்ட பதிவுகள் மற்றும் இன்டர்வ்யூக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement