பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை! 30 பணியிடங்கள் நிரப்பாததால் நோயாளிகள் வருகை குறைவு

பெரியகுளம்; பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 40 டாக்டர்கள் பணி செய்த இடத்தில் தற்போது 10 டாக்டர்கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் வருகை குறைந்தும் சிகிச்சை பெற தள்ளு முள்ளு ஏற்படுகிறது.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தாலுகா முழுவதில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 200க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பொது மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவம் என 35 பிரிவுகள் உள்ளது. இங்கு 40 டாக்டர்கள் பணியில் இருந்தனர். இம் மருத்துவமனைக்கு 2015 தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்பு வெளிநோயாளிகள் பிரிவு காலை 7:30 மணிக்கு துவங்கும். இதற்கு முன்பாக டாக்டர்கள் 7:15 மணிக்கு மருத்துவமனைக்குள் வந்துவிடுவார். தற்போது பல டாக்டர்கள் காலை 8:30 மணிக்கு வருகின்றனர். இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் நின்று நோயாளிகள் சிரமப்படுகின்றனர். டாக்டர்கள் வருகையை கண்டறிய 'பயோ மெட்ரிக்' விரல் பதிவு செய்யும் ஸ்கேனர்கள் வைக்க இடத்தேர்வு செய்தும் ஏனோ நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் ஓ.பி., பகுதியில் மின்விசிறி இல்லாததால் அதிகளவில் சிரமப்படுகின்றனர். ஓ.பி.,பிரிவிற்கு தாமதமாக வரும் டாக்டரை சந்திக்க நோயாளிகள் தள்ளு, முள்ளு செய்யும் நிலை தினமும் தொடர்கிறது.
இங்கு விபத்து அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலுதவி மட்டும் செய்து தேனி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்புகின்றனர். மயக்கவியல் டாக்டர் இல்லாததால் ஆப்பரேஷன் குறைந்து வருகிறது.
இரவில் பணிக்கு வரும் டாக்டர்கள், இரவு 11:00 மணிக்கு மேல் மருத்துவமனைக்குள் காண்பது அரிதாக உள்ளது. நர்ஸ்களிடம் 'டூயூட்டி டாக்டர்' பற்றி கேட்டால் 'ரவுண்ட்ஸ்' சில் உள்ளார் என்ற பதில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களிடம் கூறப்படுகிறது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனை மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய அலுவலர் கண்டு கொள்வதில்லை. இணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள மருத்துவமனையிலேயே இந்த அவலம் தொடர்கிறது.
தற்போது இங்கு 10 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கண்காணிப்பாளர் குமார் கூறுகையில்,'டாக்டர்கள் காலி பணியிடம் நிரப்பக் கோரி சென்னை மருத்துவ இயக்குனர் அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம்,' என்றார். இதே பதிலை ஒரு ஆண்டுக்கும் மேலாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
--
மேலும்
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்