வாழை விவசாயிகளுக்கு உதவலாமே அரசு துறையினர்; ஓட்டல்,கடைகள் தோறும் இலை வாங்க வழி காணுங்க

வத்தலக்குண்டு ; திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் வாழை இலையை பயன்பாடை அதிகரிக்க அரசு துறை நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

மாவட்டத்தில் வத்தலக்குண்டு, ஆத்துார், சேவுகம்பட்டி, நிலக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, அய்யலுார் ஆகிய இடங்களில் வாழை சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் சாகுபடியாகும் வாழை திண்டுக்கல், வத்தலக்குண்டு, பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதி கமிஷன் கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு கேரளா, கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வாழைத்தாரினால் லாபம் கிடைக்காது. அதனை ஈடுகட்ட வாழை இலை லாபம் கொடுப்பதாக உள்ளது. இருந்தாலும் வாழை இலைக்கு சராசரி விலை கிடைப்பதில்லை. விசேஷ, முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்கள், சபரிமலை சீசன், கார்த்திகை, தைப்பூச சீசன் நாட்களில் மட்டுமே விலை கிடைத்து வருவதால் வாழை சாகுபடியின் பரப்பளவும் வெகுவாக குறைந்து வருகிறது.

தலை வாழை இலை போட்டு அறுசுவை உணவு பரிமாறி விருந்தினர்களை மகிழ்விப்பது நமது பாரம்பரிய பழக்கமாகும். முன்பெல்லாம் ஓட்டல்களில் வாழை இலையில் பரிமாறி வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வந்தனர். நவீனத்தின் உச்சமாக தற்போது ஒரு சில ஓட்டல்களைத் தவிர சிறிய , டிபன் சென்டர்களில் பாலிதீன், பட்டர் பேப்பர்களை பயன்படுத்துகின்றனர். இவற்றால் வாடிக்கையாளர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படுவதை அறிந்தும் நவீனத்தின் பெயரில் பேப்பர்களில் பரிமாறுகின்றனர்.இதை தவிர்க்க ஓட்டல்,மீன்,இறைச்சி, டிபன் சென்டர், டீ க்கடை உள்ளிட்ட கடைகளில் வாழை இலைகளை பயன்படுத்த அரசு துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

.......

விவசாயிகளுக்கு பாதிப்பு

வாழைத்தாரினால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை. வாழை சாகுபடியில் உள்ள செலவினத்தை ஈடு கட்டுவதற்கு லாபம் பார்ப்பதற்கு வாழை இலை தான் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். பெரும்பாலான ஓட்டல்களில் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதால் எங்களை போன்ற விவசாயிகளுக்கு பாதிப்பு தான் ஏற்படுகிறது. வாழை இலையில் பார்சல் கட்டினால் உணவு பண்டங்கள் கெட்டுப் போகாது. சூடாக பார்சல் கட்டும்போது அதன் சத்தும், இலையினுடைய சத்தும் சேர்ந்து வாடிக்கையாளருக்கு நன்மையை கொடுக்கும். பாலிதீன் பயன்படுத்துவதால் தீமை தான் ஏற்படும். ஓட்டல் உரிமையாளர்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வாழை இலையை பயன்படுத்த முன்வர வேண்டும்.

கண்ணன், வாழை விவசாயி, ஆடுசாபட்டி.

...........

Advertisement