கருவேலம் மரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் நெடுங்குளம்

நத்தம்; சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி நெடுங்குளம் கருவேல் மரங்கள் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சியளிக்கிறது.இதனால் நீரை தேக்க முடியாத நிலை உள்ளதால் இவற்றை அகற்ற வேண்டும்.

சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டி ஊராட்சியில் உள்ளது நெடுங்குளம். 21.17 ஏக்கர் கொண்ட இக்குளத்திற்கு சிறுமலை சந்தனவர்த்தினி ஆற்று நீரே வருகிறது.

நெடுங்குளம் நிறைந்தால் அதனை சுற்றிய பலநுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் போர் வெல்கள், கிணறுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் பெருகும். இதனால் சுற்று கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னையும் ஏற்படாது

தற்போது நெடுங்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குளத்தின் பரப்பளவில் 90 சதவீதம் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.தனி நபர்களும் குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

இதன் கரையில் இருந்து பார்த்தால் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது.

குளத்திற்கு வரும் நீரும் கருவேலமரங்களால் குறைந்து குறிப்பிட்ட நாளிலே வறண்டு காணப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி கருவேல மரங்களை அகற்றி குளத்தை துார்வார வேண்டும்.

தேங்கும் நீரை உறிஞ்சு விடுகிறது



ஏ.ஜி.டி.அந்தோணி, சமூக ஆர்வலர், கொசவபட்டி: வீரசின்னம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நெடுங்குளம் தற்போது சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சி அளிக்கிறது.

குளத்தில் தேங்கும் தண்ணீரை சீமை கருவேலமரங்கள் உறிஞ்சி விடுகின்றன.

இதனால் போதுமான தண்ணீர் இருந்தும் நீரை தேக்கி வைக்க வழி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை கிட்ட பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தம் செய்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

விவசாயத்தை கைவிடும் நிலை



டி.தனபால், விவசாயி, வீரசின்னம்பட்டி: நெடுங்குளம் நிறைந்தால் வீரசின்னம்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.தற்போது குளமே தெரியாதபடி கருவேலமரங்கள், செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

நெடுங்குளம் நிறைந்தால் மறுகால் தண்ணீர் மூலம் அடுத்தடுத்து உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் நிறையும்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பின் பிடியில் குளம் உள்ளது.

குளத்தில் தண்ணீர் இல்லாததால் எங்களைப் போன்ற விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நெடுங்குளம் மட்டுமன்றி பெரும்பாலான குளங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. விவசாயத்தை காக்க குளங்களை சீரமைத்து தண்ணீரை தேக்க வேண்டும்.

Advertisement