புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் வேகமெடுக்குமா? மத்திய அரசின் நிதி கிடைக்காததால் சிக்கல்

புதுச்சேரி; புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ள முக்கியசுற்றுலாத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று விரைவுப்படுத்த வேண்டும்.


சுவதேஷ் தர்ஷன் திட்டம் என்பது மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் துவங்கப்பட்ட சுற்றுலா வளர்ச்சி திட்டமாகும். குறிப்பாக, நாட்டில் நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்தியாவில் அதிகம் தேடப்படும் பட்டியலில் முதலிடம் இடம் பெற்ற புதுச்சேரி மாநிலத்திற்கு சுவதேஷ் தர்ஷன் 1.0 திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய மத்திய அரசு நிதியை வாரி வழங்கியது.

கடற்கரை சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.58.44 கோடி, பாரம்பரிய சுற்றுலா மேம்பாடு ரூ.45.70 கோடி, ஆன்மிக சுற்றுலாவிற்கு ரூ.30.94 கோடி என, அதிக நிதியை அளித்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து புதுப்பொலிவும் பெற்றது.

அடுத்து, உலக அளவில் சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நகரங்களில் புதுச்சேரி நகரம் இரண்டாம் இடம் பிடித்த சூழ்நிலையில் புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்காக அரசு சார்பில், அனுப்பப்பட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்த ஏற்றுக்கொண்டது.

குறிப்பாக, சுவதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.29 கோடியில் காரைக்கால் கடற்கரை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் இன்னும் கடற்கரை ஒழுங்காற்று குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதேபோல், பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.25.94 கோடியில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர் கோவிலில் ஆன்மிக பயணிகளுக்கான வசதிகள், சுற்றுலா மேம்பாட்டு திட்டம், திறன் சார்ந்த சுற்றுலா தல மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20.29 கோடியில் புதுச்சேரி புல்வார் நகர பகுதியை கலாசாரம், பாரம்பரிய நோக்கில் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசின் நிதி ஒப்புதல் ஆணை வர வேண்டியுள்ளதால் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது போன்ற பெரிய திட்டங்களை முடிக்க 24 மாதங்கள் தேவைப்படும். அப்படியே பணிகளை வேகப்படுத்தினால் கூட ஒன்னரை ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் திட்டங்களை ஏற்றுக்கொண்ட மத்திய அரசிடமிருந்து இருந்து இன்னும் நிதி கிடைக்காமல் உள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி முடிய ஓராண்டே உள்ளது. நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், தேர்தல் நேரத்தில் அரசால் எதுவும் செய்ய முடியாது. எதிர்க்கட்சி சொல்லுவது போல் புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி அரசு தான் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு நேரடியாகவே மத்திய அரசினை கதவினை தட்டி நிதியை பெற்று சுற்றுலா திட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.

மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு பா.ஜ., எம்.பி., அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களை தொடர்பு கொண்டு இந்த திட்டங்களுக்கு நிதியை விரைவாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement