தடையை மீறி மீன்பிடித்தால் நிவாரணம் 'கட்;' மீன்வளத் துறை எச்சரிக்கை

புதுச்சேரி; தடையை மீறி மீன் பிடித்தால் தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என, மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து மீன் வளத் துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் ஏப். 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு, கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் புதுகுப்பம் மீனவ கிராமம் வரையில் தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற சூழ்நிலையில், ஒரு மீனவ கிராமத்திலிருந்து பைபர் படகில், கடலில் மீன்பிடி தொழிலில், தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக துறைக்கு புகார்கள் வருகிறது.

இதன் காரணமாக, மற்ற கிராம மீனவர்களிடையே பதற்றமான சூழல் ஏற்படுகிறது.

எனவே, அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார், மக்கள் குழு, கோவில் நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள், புதுச்சேரி அரசால் வெளியிடப்பட்டுள்ள மீன்பிடி தடைகால ஆணையை தவறாது பின்பற்ற வேண்டும்.

தங்களது கிராமத்தை சேர்ந்த இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையை மீறி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு மீன்வளத் துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணம் நிறுத்தப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement