புனித வெள்ளியையொட்டி சிலுவைப்பாதை பவனி

புதுச்சேரி; புனித வெள்ளியையொட்டி புதுச்சேரி தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி நேற்று நடந்தது.

ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாச ஜெபத்தில் இருந்ததை நினைவு கூறும் தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு வெள்ளியும் சிலுவைப்பாடு நினைவு கூறப்பட்டது. கடந்த ஞாயிறு குருத்தோலை பவனி நடந்தது. நேற்று புனித வெள்ளி கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, பெரிய சிலுவைப்பாதை பவனி நடந்தது. அதன்படி, புதுச்சேரி ஜென்ம ராக்கினி மாதா ஆலயத்தில் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிலுவைப் பாதை பவனி நடந்தது. இதேபோல், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயம், ரயில் நிலையம் எதிரே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆட்டுப்பட்டி அந்தோணியர் ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம் உட்பட தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி நடந்தது.

இதில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஈஸ்டர் பெருவிழா வரும் 20ம் தேதி நடக்கிறது.

Advertisement