வீடு கட்டும் பணியில் புதிய வகை பொருட்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை!

பொதுவாக வீடு கட்ட என்னென்ன பொருட்கள் தேவை என்பது குறித்த ஒரு அடிப்படை புரிதல் அனைவருக்கும் இருக்கும். இதற்கு அப்பால், ஒவ்வொரு பொருள் தொடர்பான கூடுதல் விஷயங்களை தொழில்முறையில் உள்ளவர்கள் வாயிலாக அறிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

புதிதாக ஒரு வீட்டை கட்டும் போது அதில் பாரம்பரியமாக சில பொருட்களை பயன்படுத்தி வந்து இருப்போம். கால மாற்றத்தில், தற்போது, பல்வேறு நிலைகளில் மாற்று பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இதில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

குறிப்பாக, சுவர் எழுப்பும் பணிக்கு செங்கல் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஹாலோ பிளாக்குகள், எரிசாம்பல் கற்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் எரிசாம்பல், ஹாலோ பிளாக்குகளை பயன்படுத்தும் போது, அது தொடர்பான பொது நன்மைகளுக்கு அப்பால் தனிப்பட்ட சிறப்பு, தரம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இதே போன்று, கான்கிரீட் கலவை தயாரிப்பதில் ஆற்று மணலுக்கு பதிலாக தற்போது எம். சாண்ட் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதன்படி, வீடு கட்டும் பணிக்கு எம் சாண்ட் பயன்படுத்துவதில் அடிப்படையில் எந்த தவறும் இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், நீங்கள் வாங்கும் எம்.சாண்ட் யாருடைய தயாரிப்பு, அந்நிறுவனத்துக்கு முறையான தரச்சான்று, அங்கீகாரம் உள்ளிட்டவை இருக்கிறதா என்று பாருங்கள். ஆற்று மணலுக்கு மாற்று என்றாலும், ஆற்று மணலின் தன்மைக்கும், எம் சாண்ட் தன்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்து செயல்படுவது அவசியம்.

இதில் கட்டு வேலைக்கு தனியாகவும், பூச்சு வேலைக்கு தனியாகவும் தயாரிக்கப்படும் எம். சாண்ட்களை கேட்டு வாங்ககி பயன்படுத்த வேண்டும். நீங்கள் வாங்கும் எம். சாண்ட் கலப்படம் இல்லாததாக, தரமான தயாரிப்பாக இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, தரை அமைப்பதற்கான பதிகற்கள் விஷயத்திலும் பல்வேறு புதிய மாற்றங்கள் வந்துள்ள நிலையில் அதை புரிந்து செயல்படுவது அவசியம். குறிப்பாக, செராமிக் பதிகற்கள் தான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு மாற்றான பொருட்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில், பதிகற்கள் விஷயத்தில் ஸ்லாப் கற்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் சிறிய அளவிலான பதிகற்களுக்கு பதிலாக ஆள் உயர ஸ்லாப் பதிகற்களை பயன்படுத்துவதால், வேலை நேரம், செலவு குறைவது உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும்.

பொதுவாக, புதிய வகை பொருட்களை பயன்படுத்த தயக்கம் வேண்டாம் என்றாலும், அது நமக்கு எந்த வகையில் ஏற்றது, தரமாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். சீரமைப்புக்கான வழி இல்லாத வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் தவறு எதுவும் இல்லை என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

Advertisement