அதிக வெயிலின் தாக்கம் கான்கிரீட் கலவைக்கும் பாதகமாகும்!

புதிதாக வீடு கட்டும் போது அதற்கான பணிகளில் இயற்கையின் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று தான், பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். இதில் மழைக்காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.

மணல், செங்கல், சிமென்ட் போன்ற பொருட்களை திறந்தவெளியில் வைத்து பாதுகாக்க முடியாது என்பது போன்ற பிரச்னைகள் பரவலாக தெரியும். ஆனால், கான்கிரீட் கலவை தயாரிப்பு பணிக்கு மழையால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை அனைவரும் அறிந்து இருப்போம்.

இந்த பின்னணியில், வெயில் காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டால் இது போன்ற பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், எதார்த்த நிலையில், கோடை காலத்தில் அதிக வெயிலும் கான்கிரீட் கலவைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின்பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் கடுமையாகி கொண்டு செல்கிறது. சாதாரணமாக, 15 நகரங்களில், 100 டிகிரி வெயில் என்பதை செய்திகள் வாயிலாக தொடர்ந்து பார்க்க முடிகிறது.

இதன்படி, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் என்றால், அது 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், கட்டுமான பணிக்காக திறந்தவெளியில் கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும் போது, அங்கு, அதிகபட்ச வெப்ப நிலை, 32 டிகிரி செல்ஷியஸ் வரை தான் இருக்க வேண்டும்.

இந்த வெப்ப நிலையில் கான்கிரீட் கலவை தயாரிக்கப்பட்டால் தான் அதன் முழுமையான பயன், வலிமை கிடைக்கும் என்று தொழில்நுட்ப ரீதியாக கூறப்படுகிறது. இதில் தவிர்க்க முடியாத நிலையில், சில சமயங்களில், 35 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகபட்ச வெப்ப நிலை இருக்கலாம்.

ஆனால், கோடையில் தாக்கம் அதிகரிக்கும் சமயத்தில் இருப்பது போன்று, 40 டிகிரி செல்ஷயஸ் நிலவும் நேரத்தில் திறந்த வெளியில் கான்கிரீட் கலவை தயாரிக்கப்படுவது நல்லதல்ல. இவ்வாறு கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும் போது அதில் நீங்கள் சேர்க்கும் தண்ணீர், விரைவாக ஆவியாகும் நிலை ஏற்படுகிறது.

உலக அளவில் கோடை காலத்தில் கான்கிரீட் கலவை தயாரிக்கப்படும் போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் கோடை காலத்தின் பாதிப்பு என்ன என்பதை மக்கள் தற்போது தான் புரிந்துகொள்ள துவங்கியுள்ளனர்.

இதுனால், அதிக வெயில் நிலவும் போது தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவை உங்கள் கட்டடத்துக்கு முழுமையான வலிமையை கொடுக்காது என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

Advertisement