கட்டடங்களில் விரைவாக பழுது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

ஒவ்வொரு கட்டடமும் கட்டப்படும் முறை, அதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பணியாளர்களின் வேலை திறன் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கவனிக்கப்படுகிறது. இதில், சரியாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும், அதற்கான வழிமுறை தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.

முறையாக, தரமான கான்கிரீட்டை பயன்படுத்தினாலும் நீராற்றும் நாட்கள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கான்கிரீட் கட்டுமானங்களை உறுதியாக கட்டுவது என்பதுடன் முறையாக கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கட்டுமான தொழில்நுட்ப வரையறைகளின் அடிப்படையில், கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டால், அது, 100 ஆண்டுகள் வரை தாங்கி நிற்க வேண்டும். ஆனால், சமீப காலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் பெரும்பாலும், 50 ஆண்டுகளை தாண்டுவதே அரிதாகி உள்ளது.

தரமான கம்பிகள், சிமென்ட், மணல் போன்ற பொருட்களை பயன்படுத்திவிட்டோம் என்று அமைதியாக இருந்துவிட கூடாது. குறிப்பாக, கட்டுமான பணியில் பூச்சு வேலை, நீராற்றும் கால அவகாசம் ஆகியவற்றில் மிக துல்லியமாக சரியாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

கான்கிரீட் கட்டடங்களில் பயன்பாடு அடிப்படையில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக,பல்வேறு இடங்களில் பழுது ஏற்படுகிறது. கட்டடங்களில் எந்தெந்த இடங்களில் பழுது ஏற்படும் என்று வரையறுத்து கூறமுடியாத அளவுக்கு பல்வேறு விதங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன.

அனைத்து கட்டுமான பொருட்களையும் தரமாக பார்த்து தேர்வு செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டாலும், எதிர்பாராமல் ஏற்படும் குறைபாடுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. கட்டடங்களில் அடித்தளம் சரிதல், சுவர்களில் விரிசல் ஏற்படுவது, மேற்பூச்சு உடைவது போன்றவை பொதுவான பழுதுகளாக பார்க்கப்படுகின்றன.

கட்டடங்களில் சிறிய அளவில் இடைவெளிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டடங்களில் வடிவ மைப்பு குறைபாடு காரணமாக, சிறு பொந்துகள், இடைவெளிகள் ஏற்படுவதை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

உங்கள் கட்டடத்தில் பயன்பாட்டு நிலையில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டால் அது குறித்து பதற்றம் அடையாமல், பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். இன்றைய சூழலில், கட்டடங்களில் பழுது ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றாலும், அதை சரி செய்வதில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறையினர்.

Advertisement