அழிசூர் தடுப்பணை சீரமைக்கப்படுமா?

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் அரசேரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டும்போது, கலங்கல் வாயிலாக உபரிநீர் வெளியேறி, பாசன கால்வாயில் செல்கிறது.

இக்கால்வாயில் வீணாக செல்லும் உபரி நீரை சேமிக்க, அப்பகுதியில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2020 --- 21ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 4.6 லட்சம் செலவில், புதிய தடுப்பணை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, தடுப்பணை பகுதியில் முறையான பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், மழை நேரங்களில் அரசேரி நிரம்பி கலங்கல் வழியே, உபரி நீர் வெளியேறும் போது, தடுப்பணையில் அதை சேமிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, தடுப்பணை பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement