குப்பை பிரச்னையில் லாரி ஏற்றி கொல்ல முயற்சிஅலறியடித்து ஓடிய பெண்கள்; டிரைவர் மீது வழக்கு




ஆத்துார்:குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், லாரி ஏற்றி கொல்ல முயன்றதால், பெண்கள் அலறியடித்து ஓடினர். இதில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி அனிதா, 36. இவர் நேற்று காலை, 8:00 மணிக்கு வீடு அருகே குப்பை கொட்டியுள்ளார். இதுகுறித்து, அருகே வசிக்கும் ரவீந்திரன் மகன் பூபதி, 32, என்பவர் கேட்க, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதியம், 1:30 மணிக்கு பூபதிக்கு ஆதரவாக, அவரது நண்பர் பாலமுருகன், 40, என்பவர், லாரியை, அனிதா வீடு முன் நிறுத்தியிருந்த, 'ஸ்விப்ட் டிசையர்' கார் மீது மோத வந்தார்.


அப்போது, அத்தெருவை சேர்ந்த பெண்கள் உள்பட, 7 பேர், லாரியை தடுக்க முயன்றனர். ஆனால் டிரைவர், அனைவர் மீதும் மோதுவது போல் வந்தார். இதனால் அனைவரும் சிதறியடித்து ஓடினர். இதில் ஒரு பெண், தெரு ஓர புற்கள் பகுதியில் விழுந்தார். லாரி, கார் மீது மோதியது. காரின் முன் பகுதி சேதமானது. கார் அருகே இருந்த ஒரு பைக்கும் சேதமானது. இதில் அனிதா, பூபதியின் உறவினர் செல்வி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துார் ஊரக போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் பெண்கள் ஓடி விழுந்த வீடியோ காட்சி பரவி வருகிறது.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''லாரியை எடுத்துச்சென்று மக்கள் மீது மோதுவது போல் சென்றுள்ளார். தடுத்து நிறுத்தியும், டிரைவர் பிரேக் போடவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement