மின் துாக்கிக்கு சான்றிதழ் பெறாததால் சிக்கலில் தேனி ஒன்றிய அலுவலகம் கட்டுமான மின் இணைப்பு கட்டணம் செலுத்தும் அவலம்

தேனி,:தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்ட 'லிப்ட்' வசதிக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறாததால் கட்டுமான மின் இணைப்பு கட்டணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் மாதம் ரூ.50 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனியில் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு ரூ.3.12 கோடி செலவில் புதிதாக தரை தளம் மற்றும் இரண்டு மாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இக் கட்டடத்தை 2024 ஜூலை 29ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலக கட்டுமான பணிக்காக 'டாரிப்' 6 ல் மின் இணைப்புபெறப்பட்டது. இந்த இணைப்பில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.12.85 வசூலிக்கப்படும்.

ஒன்றிய அலுவலகம் செயல்பட துவங்கி எட்டு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வகை மாற்றம் (டாரிப் 5) செய்ய முடியவில்லை. நிரந்தர மின் இணைப்பாக மாற்ற முடியவில்லை. மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தப்படுகிறது. பழைய கட்டடத்திற்கு அதிகபட்சம் ரூ. 15ஆயிரம் வரை தான் மின் கட்டணம் செலுத்தினர். தற்போது மூன்று மடங்கு அதிகமாக செலுத்தி வருகின்றனர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்தி உள்ளனர். அதற்காக முறையான பாதுகாப்பு சான்றிதழ் இதுவரை பெறவில்லை. இதனால் நிரந்தர மின் இணைப்பு வழங்கவில்லை. மின் ஆய்வாளர் ஆய்வு செய்து பாதுகாப்பு சான்றிதழ் வழங்கினால் மட்டுமே நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement