வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி 6 வாரமாக இழுபறி 

சிவகங்கை : ''வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு 42 நாட்களாக (6 வாரம்) சம்பளம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட சக்கந்தி ஊராட்சி பெண்கள்,'' கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் கண்மாய் துார்வாருதல், சாலைகள் பராமரிப்பு, கண்மாய் வரத்து கால்வாய் பராமரிப்பு, பள்ளி வளாக பணிகள் என பல்வேறு பணிகளை கிராமப்புற பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிக்கென நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.343 வரை சம்பளமாக வழங்கி வருகின்றனர். இப்பணிக்கான சம்பளம் வாரம் ஒரு முறை அந்தந்த ஊழியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இம்மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட பணிகளில் ஈடுபட்ட பெண்களுக்கு கடந்த 6 வாரமாக (42 நாட்கள்) சம்பளம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வில்லை என தெரிவிக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் சிவகங்கை அருகே சக்கந்தியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன், கலெக்டர்ஆஷா ஆஜித் ஆகியோரிடம் சக்கந்தி கிராம பெண்கள் புகார் தெரிவித்தனர். இதற்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.

பணம் வந்ததும், அவரவர் வங்கி கணக்கில் அனைத்து பணமும் வரவு வைக்கப்படும் என பெண்களிடம் கலெக்டர் ஆஷா அஜித் உறுதி அளித்தார்.

Advertisement