சிவகங்கையில் குடிநீர் தட்டுப்பாடு; வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருவதால்

சிவகங்கை: சிவகங்கை நகரில் வாரம் ஒரு முறை மட்டும் குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு தினசரி 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.

மருதுபாண்டியர் நகரில்4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியும்,மதுரை ரோட்டில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியும், காளவாசல் பகுதியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியும், அம்பேத்கர் தெரு அருகே பரணி பூங்காவில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியும், இந்திரா நகரில் ஒரு லட்சம் லிட்டர்கொள்ளளவு உள்ள தொட்டியும் உள்ளது.

இவற்றின் மூலம் நகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சிவகங்கை நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. நகராட்சிக்கு இடைக்காட்டூர் வைகை ஆற்று குடிநீர் மூலமும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் இவை பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக 3 நாட்களுக்கு ஒரு முறை, 4 நாட்களுக்கு ஒரு முறை வாரத்திற்கு ஒரு முறை என தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கோடை ஆரம்பித்து விட்டதால் தண்ணீரின் தேவை அதிகமாகவே உள்ளது. கடந்த சில வாரமாக சிவகங்கை நகராட்சியில் பல பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் வராததால் குடிதண்ணீரை ரூ.30க்கு வாங்கும் சூழல் உள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் கோடை துவங்கியநிலையில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement