கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த இருமாநில மக்கள் வலியுறுத்தல்; நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு

கம்பம் : கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்தி பொதுப்போக்குவரத்திற்கு தகுதியானதாக மாற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக, கேரள மாநில பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக கேரள மாநிலங்களை இணைப்பதற்கு குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு ரோடுகள் உள்ளன. இதில் குமுளி, போடிமெட்டு ரோடுகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. கம்பமெட்டு ரோடு மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. குமுளி மலை ரோடு 6 கி.மீ.தூரமும், கம்பமெட்டு ரோடு 8 கி.மீ. தூரம் கொண்டது.

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பலருக்கு இடுக்கி மாவட்டத்தில் ஏலத் தோட்டங்கள் உள்ளன.

தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்களில் தொழிலாளர்கள் ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்புகின்றனர். சபரிமலை சீசனில் குமுளி மலை ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பக்தர்களின் வாகனங்கள் கம்பமெட்டு ரோட்டில் திருப்பி விடப்படுகிறது. போடிமெட்டு ரோட்டில் போக்குவரத்தில் பிரச்னை என்றால், மூணாறு செல்வதற்கு கம்பமெட்டு ரோடு பயன்படுகிறது. இது இருமாநில மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோடாகும்.

ஏழு கி.மீ.,துாரம் குறைக்கும் ரோடு



கம்பத்தில் இருந்து குமுளி வழியாக கேரளா செல்ல 20 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். ஆனால் கம்பத்திலிருந்து கம்பமெட்டு வழியாக கேரளா செல்ல 13 கி.மீ. தூரத்தில் செல்லலாம். சமீபமாக கம்பமெட்டு ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சுற்றுலா ஆம்னி பஸ்கள், கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் பிற வாகனங்கள் அதிகளவில் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் ஏலத் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல தாமதமாகிறது. கம்பமெட்டு ரோடு 6 மீ., முதல் 8 மீ., அகலம் உள்ளது. ஆனால் செங்குத்தான குறுகிய 18 வளைவுகள் கொண்ட ரோடா உள்ளதால் கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

ரோடு அகலப்படுத்தினால்

போக்குவரத்து எளிதாகும்



அன்பழகன், ஏலக்காய் ஆக்சன் நிறுவன நிர்வாகி, கம்பம் : கம்பமெட்டு ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டிப்பர் லாரிகளுக்கு பின்னால் சென்றால், மலை ரோட்டில் பயணிகள் வாகனம் மெதுவாக தான் செல்ல முடியும்.

இதனால் 8 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. இந்த ரோட்டை ஏல விவசாயிகளும், தோட்ட தொழிலாளர்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் சுற்றுலா வாகனங்கள் டிப்பர் லாரிகள் செல்வது அதிகரித்துள்ளது. எனவே ரோட்டை அகலப்படுத்தினால் பொதுப் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்



அருண்பிரசாத் , ஏல விவசாயி,கம்பம் : கம்பமெட்டு அருகில் உள்ள எனது ஏலத் தோட்டத்திற்கு தினமும் சென்று வருகிறேன். சமீபமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்காகவே ஜீப்பை தவிர்த்து டூ வீலரில் செல்கிறேன். அதிலும் ஏதாவது ஒரு வாகனம் பழுதாகி நின்றால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். கம்பம் மெட்டு ரோட்டை மாநில நெடுஞ்சாலை விகிதப்படி 14 மீட்டர் மாற்றினால் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டம்



உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜா கூறுகையில், ' மாநில நெடுஞ்சாலை ரோட்டை தேசிய நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். ஆனால் வனத்துறை அனுமதி தேவை. தற்போது கம்பமெட்டு ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை நான்கு வழி சாலையாக மாற்ற அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் அதற்கான வேலைகள் துவங்க வாய்ப்புள்ளது,' என்றார்.

தீர்வு ரோடு அகலப்படுத்தினால் பிரச்னை தீரும்



தமிழகம், கேரளா மக்கள் அதிகம் பயன்படுத்தும் கம்பமெட்டு ரோட்டை மாநில நெடுஞ்சாலைத் துறை நான்கு வழிச்சாலை மாற்றுவது தீர்வாகும். தற்போது இந்த ரோடு 25 முதல் 45 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. எனவே, கம்பமெட்டு ரோட்டை அகலப்படுத்த அரசு பரிசீலித்து வருவது நல்ல தீர்வாகும்.

Advertisement