மணிமேகலை விருது பெற சமுதாய  அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுபெற ஏப்.,30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புசங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோருக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டில் குறைந்த பட்சம் 10 கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். 2023-24ம் ஆண்டுக்கான விருது பெற மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள தகுதியான சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும், நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும் ஏப்., 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Advertisement