பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி

சிக்கபல்லாபூர் : கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில், அதன் அடியில் சிக்கி தந்தையும்,- மகளும் உயிரிழந்தனர். தாயின் இரு கால்களும் துண்டாகின.

சிக்கபல்லாபூர் தாலுகா, லிங்கஷெட்டாபுரா கேட் பகுதியில் உள்ள பெங்களூரு - - ஹைதராபாத் நெடுஞ்சாலையில் நேற்று, பைக் ஒன்று பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை என மூவர் பயணம் செய்தனர்.

பைக்கின் இடதுபுறம் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென சாலையின் கிராசில் இருந்து, கார் ஒன்று நெடுஞ்சாலைக்குள் நுழைந்தது.

அதன் மீது மோதாமல் இருப்பதற்காக, லாரி டிரைவர் திடீரென 'பிரேக்' பிடித்தார். இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சைடில் வந்து கொண்டிருந்த பைக் மீது கவிழ்ந்தது.

பைக்கில் வந்த மூவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதை பார்த்த வாகன ஓட்டிகள் பதறி அடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிக்கபல்லாபூர் கிராமப்புற போலீசார், கிரேன் உதவியுடன் கன்டெய்னரை துாக்கி, மூவரையும் வெளியே எடுத்தனர். லாரி டிரைவர் உயிர் தப்பினார்.

இதில் வெங்கடேஷ், அவரது நான்கு வயது பெண் குழந்தை தீக் ஷிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். வெங்கடேஷின் மனைவி ரூபா இரு கால்களும் துண்டாகி இருந்தன. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடி வருகிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிக்கபல்லாபூர், பந்தஹள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், இவரது மனைவி ரூபா, குழந்தை தீக் ஷிதா ஆகியோர் நேற்று தங்கள் ஊரிலிருந்து நயனஹள்ளிக்கு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

Advertisement