வனத்துறை நர்சரி பண்ணை அமைக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள செய்களத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வனத்துறை சார்பில் நர்சரி பண்ணை அமைப்பதற்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செய்களத்துார் சமத்துவபுரம் அருகே வனத்துறை சார்பில் நர்சரி பண்ணை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பண்ணை அமைத்தால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.

இப்பகுதியைச் சேர்ந்த காவிரி வைகை குண்டாறு பாசன சங்க மாநில செயலாளர் ராமமுருகன், கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

கிராம சபை கூட்டத்தை கூட்டி மக்களின் ஒப்புதலை பெற்ற பிறகு நர்சரிபண்ணை அமைக்கும் பணிகளை தொடருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று செய்களத்துாரில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கேசவ தாசன், வனத்துறை அதிகாரி பிரபா, தாசில்தார் கிருஷ்ணகுமார், பி.டி.ஓ., சோமதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்களத்துார் ஊராட்சியைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நர்சரி பண்ணை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பண்ணை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

Advertisement