கோடை விவசாய பணி தொடக்கம்

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் கோடை விவசாய பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் காலம் பருவத்தில் இரண்டாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

பிப்ரவரியில் அறுவடை முடிந்த நிலையில் விவசாயிகள் பலரும் பருத்தி, குறுகிய கால நெல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். கிணற்று பாசன விவசாயிகள் வயல்களில் உழவு செய்து வருகின்றனர்.

விவசாயி இளங்கோவன் கூறுகையில்: நெல் சாகுபடி செய்த வயல்களில் மாற்று இன சாகுபடி செய்தால் அடுத்த முறை நெல் விவசாயம் சிறப்பாக இருக்கும்.

எனவே பருத்தி சாகுபடி செய்துள்ளேன், நடவு செய்த பருத்தி ஒரு அடி உயர்ந்துள்ள நிலையில் களை அதிகரித்துள்ளதால் களை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்டுள்ளேன். 60 நாட்களுக்கு பிறகு சுழற்சி முறையில் பருத்தி அறுவடை செய்யலாம், கிலோ 75 ரூபாய் முதல் விலை கிடைத்தால் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும்.

நெல் கொள் முதல் மையம் போல அரசு பருத்தி கொள் முதல் மையம் அமைத்து விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்தால் கோடை காலத்தில் அனைத்து விவசாயிகளும் பருத்தி சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

பருத்தி சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை, நோய் தாக்குதலும் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவு.

எனவே அரசு பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி ராமசாமி கூறுகையில்: ஏற்கனவே என்.எல்.ஆர்., ரக நெல் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ளது.

கண்மாயில் தண்ணீர் இல்லை, எனவே கிணற்று தண்ணீரை நம்பி மீண்டும் கோடையில் நெல் நடவு செய்ய தொடங்கியுள்ளோம்.

இப்பகுதியில் 100 ஏக்கரில் கோடை கால உழவு பணிகள் நடந்து வருகின்றன. காலம் பருவத்தை விட கோடையில் செலவு அதிகம், விளைச்சலும் குறைவாகத்தான் கிடைக்கும், விவசாய நிலத்தை அப்படியே விட்டு விட்டால் கருவேல மரம் வளர்ந்து விடும் என்பதால் செலவை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் நெல் நடவு செய்ய தொடங்கி உள்ளோம், என்றார்.

Advertisement