சி.எஸ்.கே., வளர்ச்சியால் ஜாக்பாட் அடித்தது எல்.ஐ.சி., 529 சதவிகிதம் லாபம் ஈட்டியது

சென்னை, ஏப். 20-

சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டியலிடப்படாத பங்குகள் விலை 31 ரூபாயில் இருந்து, 2024ல் 195 ரூபாயாக அதிகரித்ததால், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., 529 சதவீதம் லாபத்தை ஈட்டி உள்ளது.

ஆடாமலேயே வெற்றி



கடந்த 2015ல் ஐ.பி.எல்., நிர்வாகக் குழுவின் உத்தரவை தொடர்ந்து, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்து, தனி நிறுவனமாக சி.எஸ்.கே., செயல்படத் துவங்கியது.

அப்போது, எல்.ஐ.சி., உள்ளிட்ட முதலீட்டாளர்கள், பட்டியலிடப்படாத பங்குகளை, பங்கு ஒன்று 31 ரூபாய்க்கு வாங்கினர்.

குறுகிய காலத்திலேயே சி.எஸ்.கே., உலகின் மிகவும் அதிக மதிப்புள்ள கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாக உருவெடுத்தது.

கடந்த 2024ம் ஆண்டில் முன்னணி அணியாக திகழ்ந்த சி.எஸ்.கே.,வின் பட்டியலிடப்படாத பங்குகள் 190 -- 195 ரூபாய்க்கு வர்த்தகமாகி, 529 சதவீத லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

நீண்ட கால அடிப்படையில், பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இருக்கும் எல்.ஐ.சி., போன்ற நிறுவனத்துக்கு இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும்.

 சி.எஸ்.கே., வருமானம் ஆண்டுக்கு 150 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2023- - 24ம் நிதியாண்டில் 479 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 தற்போதைய மதிப்பீட்டின்படி, எல்.ஐ.சி.,யின் மதிப்பிடப் படாத லாபம் 1,000 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

 வரி விதிப்புக்கு பிந்தைய லாபம் 1,365 சதவீதம் உயர்ந்து, 210 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வாரி கொடுத்த தோனி

உண்மையை சொல்வதென்றால், தோனி வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; அவர் மிகப்பெரிய பொருளாதாரம். தோனியின் கேப்டன்ஷிப், அணியை கூலாக வழி நடத்துவது, உண்மையான ரசிகர்கள் ஆகியவை சி.எஸ்.கே.,வை அணியாக மட்டுமின்றி, கலாசார அடையாளமாகவே மாற்றி விட்டது. இன்றும் சி.எஸ்.கே.,வின் மதிப்பில், தோனியின் பங்களிப்பை பிரித்து பார்க்க முடியாது. சி.எஸ்.கே., அணியில் தோனி இருந்தால் டிக்கெட் விற்பனை, விளம்பர ஒப்பந்தங்கள், பங்குதாரர்கள் நம்பிக்கை ஆகியவை அசைக்க முடியாததாக இருக்கின்றன.சி.எஸ்.கே., பங்குகள் வாயிலாக 529 சதவீதம் லாபம் கிடைத்ததற்கு, எல்.ஐ.சி.,யின் முதலீடு உத்தி அல்லது தோனியின் மேஜிக் என காரணங்கள் சொன்னாலும், உண்மையில் இது அதிர்ஷ்டத்தை விட மேலானது.

Advertisement