வனஎல்லையில் முறையாக பராமரிக்காததால்... அகழியை காணோம்! சாகுபடியை சேதப்படுத்தும் வனவிலங்குகள்
உடுமலை: கோடை காலத்தில், வனத்திலிருந்து வெளியேறும் வனவிலங்குகளால், விளைநிலங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, ஆனைமலை புலிகள் காப்பக எல்லையில் மண் மேடாக மாறியுள்ள அகழியை துார்வாரி, சோலார் மின்வேலியை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையில், மலை அடிவாரத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மா, தென்னை மட்டுமல்லாது சீசன் சமயங்களில், நிலக்கடலை, மொச்சை மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகளுக்கு தற்போது வனவிலங்குளின் பிரச்னை தீராத தலைவலியாக இருந்து வருகிறது. கோடை காலத்திலும், சாகுபடியில் அறுவடை தருணத்திலும், வனத்திலிருந்து வெளியேறி, விளைநிலங்களில், வனவிலங்குகளால் சேதம் ஏற்படுகிறது.
கல்லாபுரம், மானுப்பட்டி, சின்னக்குமாரபாளையம், பொன்னாலம்மன் சோலை, ஜிலோபநாயக்கன்பாளையம், ஜல்லிபட்டி, கொங்குரார் குட்டை,வலையபாளையம், தேவனுார்புதுார், ராவணாபுரம், ஆண்டியூர் என மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள கிராமங்களுக்குள் யானைகள், காட்டுப்பன்றிகளால், தென்னை, மா சாகுபடியில் தொடர் சேதம் ஏற்பட்டு வருகிறது.
முக்கிய சீசனில், மாங்காய்களையும் யானைகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருவாய் இழந்து நஷ்டத்துக்குள்ளாகின்றனர்.
வனத்தை விட்டு விலங்குகள் வெளியேறுவதைத்தடுக்க, வனத்துறை சார்பில், அகழி மற்றும் சில இடங்களில், 'சோலார்' மின் வேலி அமைக்கப்பட்டது.
வன எல்லையில், 4 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட அகழியில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், வனவிலங்குகளுக்கு தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும். விளைநிலங்களும் பாதுகாக்கப்படும்.
கடந்த, 2013ல் மானுப்பட்டி, கொங்குரார்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், வனவிலங்குகளால் விளைநிலங்களில் அதிக சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, திருமூர்த்தி அணைப்பகுதியில் இருந்து, ஒன்பதாறு செக்போஸ்ட் வரையும், அங்கிருந்து அமராவதி அணை வரை, வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டது.
சுமார், 15 கி.மீ., தொலைவுக்கு, 33 லட்சம் ரூபாய் செலவில், அகழி தோண்டப்பட்டது. குறிப்பிட்ட தொலைவுக்கு சோலார் மின்வேலியும் அமைத்தனர். இதனால், மனித -- வனவிலங்குகள் மோதலுக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது.
ஆனால், அகழியின் தொடர் பராமரிப்பை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. வன எல்லையில், பல இடங்களில் அகழிகள் மண் மேடாக மாறி விட்டன.
இயற்கையாக அமைந்துள்ள மழை நீர் ஓடைகளை வனவிலங்குகள் கடந்து வர, பாலம் போல அகழி மாறியுள்ளது. அகழியை துார்வார வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.
இதே போல், வனத்துறை சார்பில், மேற்குப்பகுதியில், அமைக்கப்பட்ட சோலார் வேலி கண்காணிப்பு, பராமரிப்பு இல்லாததால், காட்சிப்பொருளாக மாறியுள்ளது.
நடவடிக்கை எடுக்கணும்
விவசாயிகள் கூறியதாவது: வன எல்லையில், அகழி அமைப்பதால், விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்; வனவிலங்குகளும் தண்ணீர் தேவைக்காக இடம் பெயர்வது குறையும். மனித-வனவிலங்கு மோதலும் தவிர்க்கப்படும்.
அகழியை குறிப்பிட்ட இடைவெளியில் துார்வார வேண்டும். காட்சிப்பொருளாக மாறிய சோலார் மின்வேலியை புதுப்பிக்க வலியுறுத்தியும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோடை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்க, அகழி குறித்து ஆய்வு செய்து வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதில் அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.