வேறோடு சாய்ந்த மரம்; அப்புறப்படுத்திய நகராட்சியினர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர், எல்.ஐ.ஜி., காலனியில், மே பிளவர் மரம் ஒன்று, திடீரென வேறோடு ரோட்டில் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி நகரில், ரோட்டை ஒட்டியும், குடியிருப்பு பகுதிகளிலும், அதிகப்படியான மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

வேம்பு, புங்கை, வாகை, புளி உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இவைகளை முறையாக பராமரிக்கா விட்டாலும் தாமாகவே வளர்ந்து பெரிய மரங்களாக உயர்ந்து நிற்பதால், குளிர்ச்சியான காலநிலை உள்ளது.

அதேநேரம், சில மரங்கள், முற்றிலும் பட்டுப்போய்விட்டது. இந்த பட்டுப்போன மரங்கள், காய்ந்து நிற்கிறது. ரோட்டில், அதிகளவிலான வாகனங்கள் செல்லும் நிலையில், பட்டுப்போன மரங்களின் கிளைகள் அவ்வப்போது உடைந்து விழுவதால், பைக்கில் செல்பவர்கள் அச்சம் கொள்கின்றனர்.

அவ்வப்போது, துறை ரீதியான அதிகாரிகள், போக்குவரத்து, மின் வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றியும் வருகின்றனர்.

இந்நிலையில், எல்.ஐ.ஜி., காலனியில், மே பிளவர் மரம் ஒன்று, பசுமையாக இருந்த நிலையில், திடீரென சாய்ந்து கீழே விழுந்தது. இதனால் அவ்வழியே வாகனப் போக்குவரத்து தடைபட்டது. நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, அதனை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் கூறுகையில், 'பட்டுப்போன மரம் நிழலுக்கும் பயன்படுவது கிடையாது. அதேபோல, ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிய வேண்டும். அதன் பின், அவற்றை மட்டும் உரிய ஆலோசனையுடன் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மாற்றாக, அங்கு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கவும் வேண்டும்' என்றனர்.

Advertisement