பாலுார் கோவில் குளத்தை துார்வார பக்தர்கள் கோரிக்கை

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில், பாலுார் ரயில்வே கேட் அருகில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பதங்கீஸ்வரர் சமேத பிரம்மராம்பிகை கோவில் உள்ளது.

இக்கோவில், தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு பிரகாரத்தில் நால்வர், கால பைரவர், சூரியன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

இக்கோவிலின் பின்புறம் உள்ள சூரிய புஷ்கரணி குளம், பாலுார் கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது.

இந்த குளத்தில் தற்போது தாமரை கொடிகள் படந்து துார்ந்து போய், தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் உள்ளது. அதனால், இக்குளத்தை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:

இந்த குளம் துார்ந்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த குளத்தை துார் வாரி, கரைகளை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement