தண்ணீர் லாரி மோதியதால் சாலையில் சாய்ந்த மின்கம்பம்

பெருங்குடி:பெருங்குடி, கல்லுக்குட்டை திருவள்ளுவர் தெருவில், நேற்று மதியம் 1:00 மணிக்கு, அப்பகுதியைக் கடந்த தண்ணீர் லாரி மோதி, ஒரு மின் கம்பம் அடியோடு சாய்ந்தது.

அருகிலுள்ள மற்றொரு மின் கம்பமும் முறிந்து தொங்கியது. இந்த அசம்பாவிதத்தால், அப்பகுதி முழுதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதனால், நான்கு மணி நேரம் மின்சாரமின்றி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். சாலை நடுவே கிடந்த மின் கம்பத்தால், அவ்வழியாக கடக்க முடியாமல், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

கல்லுக்குட்டை பகுதியில் உள்ள பெரும்பான்மையான மின்கம்பங்கள், சேதமடைந்த நிலையிலேயே உள்ளன. எனவே, பழைய மின் கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement