சந்தையில் வியாபாரம் குறைவதால் விற்பனையின்றி காய்கறிகள் வீண்

கோயம்பேடு:கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து, காய்கறி வரத்து உள்ளது. இதில், ஊட்டி மற்றும் கர்நாடகாவில் இருந்து கேரட் வருகிறது.

இந்த ஆண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் 10 - 15 டன் கேரட் கிடைத்த இடத்தில், 30 டன் விளைச்சல் உள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையில் 200 டன் கேரட் தேவையுள்ள நிலையில், நேற்று முன்தினம் 350 டன் கேரட் வந்துள்ளது.

இதையடுத்து, கிலோ ஊட்டி கேரட் 20 ரூபாய்க்கும், கர்நாடகா கேரட் 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து குறைவால், கேரட் விற்பனையின்றி கிலோ கணக்கில் தேங்கியது. இதனால் அவை, குப்பையில் கொட்டப்பட்டன. அதேபோல், கத்திரிக்காயும் விற்பனையின்றி தேங்கியதால், குப்பையில் கொட்டப்பட்டன.

சிறு, மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துக்குமார் கூறுகையில், ''கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத்து குறைந்துள்ளது. புறநகர் பேருந்துகள் கோயம்பேடு சந்தையை சுற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை.

இதனால், கோயம்பேடு சந்தையில் வியாபாரம் குறைந்துள்ளது,'' என்றார்.

Advertisement