கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., படுகொலை; மனைவி கைது 

பெங்களூரு: சொத்து தகராறில், கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலம் சம்பரண் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 68. கடந்த 1981ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரி. கர்நாடகாவில் உதவி கமிஷனராக பணியை துவங்கியவர், 2015ல், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். ஓராண்டு அந்த பதவியில் இருந்த அவர், 2016ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்கு பின், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள வீட்டில், மனைவி பல்லவி, 65, மகன், மகள் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை 4:30 மணிக்கு, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய பல்லவி, ஓம்பிரகாஷ் இறந்து விட்டதாக கூறி, இணைப்பை துண்டித்தார்.

போலீசார் உடனடியாக அங்கு சென்றனர். வீட்டின் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் நீண்ட நேரமாக தட்டிய பின், பல்லவி கதவை திறந்தார். உள்ளே, ரத்தவெள்ளத்தில் ஓம்பிரகாஷ் இறந்து கிடந்தார். கணவரை கொன்று விட்டதாக பல்லவி கூறினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ள, 'வாட்ஸாப்' குரூப்பில், பல்லவி ஒரு தகவல் பகிர்ந்திருந்தார்.

அதில், 'ஓம்பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் என்னை கொல்ல வாய்ப்பு உள்ளது' என்று பதிவிட்டு இருந்தார். இதனால் உயிரை பாதுகாத்து கொள்ள, ஓம்பிரகாஷை, பல்லவி தீர்த்துக்கட்டியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஓம்பிரகாஷுக்கும், பல்லவிக்கும் இடையில் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ஓம்பிரகாஷ் உத்தர கன்னடாவில் வேலை செய்த போது, தண்டேலியில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை, அவரது தங்கைகள் பெயரில் பதிவு செய்து உள்ளார்.

மனைவி, மகன், மகள் பெயரிலும் சொத்து வாங்கி இருந்த ஓம்பிரகாஷ், தங்கைகள் பெயரில் பதிவு செய்த நிலத்தை பற்றி பேசக்கூடாது என்று பல்லவியிடம் கூறி இருக்கிறார். இது தான் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருந்து உள்ளது.

நேற்று மாலையும் இருவருக்கும் இடையில் சண்டை நடந்து உள்ளது. உச்சக்கட்ட கோபத்தில் இருந்த பல்லவி, கத்தியால் ஓம்பிரகாஷ் உடலில் 10க்கும் மேற்பட்ட முறை, சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.

கொலை நடந்தது மூன்று மாடி கொண்ட வீடு. முதல் மாடியில் கொலை நடந்துள்ளது. ஓம்பிரகாஷை கொன்ற பின், ஓய்வு பெற்ற இன்னொரு ஐ.பி.எஸ்., அதிகாரி மனைவிக்கு, பல்லவி வீடியோ காலில் பேசி உள்ளார்.

'அந்த அரக்கனை கொன்றுவிட்டேன்' என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சொத்து பிரச்னை மட்டும் தான் காரணமா, வேறு எதுவும் பிரச்னையா என்று பல்லவியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement