தொடரும் நிர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கலாமே: அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

திண்டுக்கல்: நீர்நிலைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. வைகையாறு உள்பட பலவும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள், ஆயிரக்கணக்கான குளங்கள் உள்ளன. கோடை மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள், இளைஞர்கள் என அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், பயன்பாடின்றியுள்ள பல கல்குவாரிகளில் தேங்கும் நீரில் உயிரிழப்போரும் உள்ளனர்.

குறிப்பாக, நீர்நிலைகளில் கரையோரங்களில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் ஆழப்படுத்தி விடுகின்றனர். வண்டல் மண் நீர்நிலைகளின் மையப்பகுதியில் தான் எடுக்க வேண்டும். கரையோரத்தில் ஆழப்படுத்துவது, வண்டல் மண் எடுப்பது போன்றவற்றால் நீர்நிலைகளுக்கு பலர் தவறி விழுந்து இறக்க நேரிடும். ேமலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளும் உயிரிழக்க நேரிடுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல்லில் சுற்றுலா தலங்கள் அதிகமிருப்பதால் வெளியூர் பயணிகளின் வருகையும் அதிகமுள்ளன. சமீபத்தில் கூட சாணார்பட்டி அருகே உள்ள தடுப்பணையில் சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்களையும் ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான நீர்நிலைகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement