திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை தரம் உயர்த்த திட்ட அறிக்கை தயாரிப்பு; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
செஞ்சி : திண்டிவனம்- - கிருஷ்ணகிரி இடையிலான இரு வழிச்சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான என். எச்.77 இரு வழிச் சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என, கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி, மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பா.ம.க., எம்.பி., அன்புமணி கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு நேற்று பதில் அளித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அன்புமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திண்டிவனம் -- கிருஷ்ணகிரி என்.எச்.77 இரு வழி சாலை பணி 625 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவடைந்தது. இந்தச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை நான்கு வழிச்சாலையாக தர உயர்த்த வேண்டும் என்ற அன்புமணி எம்.பி., விடுத்துள்ள கோரிக்கை மிக அவசியமானது. இந்த சாலையின் இடையே மையமாக அமைந்துள்ள திருவண்ணாமலைக்கு இரு மார்கத்தில் இருந்தும் தினமும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அத்துடன் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு லாரி போக்குவரத்தும், ஆம்னி பஸ் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்து அதிகரித்திருப்பதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது.
எனவே, தமிழகத்தில் பணிபுரியும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், திட்ட அறிக்கை தயாரிப்பதுடன், திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.