பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!

அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு, குடியுரிமை கொள்கையில் கெடுபிடி என, அவரது நடவடிக்கைகள் பல நாடுகளை அதிர வைத்து உள்ளன.
அவரின் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று கல்வி நிறுவனங்களுக்கு எதிரானது. தன் வழிக்கு கல்வி நிறுவனங்கள் வர வேண்டும் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் அடிபணிந்து விட்டன. அதற்கு மாறாக, அமெரிக்காவின் பழமையான மற்றும் வளமான பல்கலையான, ஹார்வர்டு பல்கலையின் செயல்பாடு உள்ளது.
அதாவது, பல்கலை வளாகத்தில், மாணவர்கள் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கையானது தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை டிரம்ப் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, பல்கலைக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
அவரின் யோசனைகளை ஏற்க, ஹார்வர்டு பல்கலை மறுத்தது. இதனால், கோபம் அடைந்த டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கான 2.2 பில்லியன் டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 18,858 கோடி ரூபாய் அளவிலான மானியங்களை நிறுத்தி விட்டார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கான நிதியை டிரம்ப் நிறுத்தியது, அமெரிக்காவில் மட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த பல்கலையில், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அதிபர் டிரம்பின் அதிரடிக்கு கட்டுப்படவும், அவரின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செயல்படவும், ஹார்வர்டு பல்கலை மறுப்பதால், அங்கு படிக்கும் மாணவர்களில், சர்வதேச மாணவர் விசா வைத்திருப்பவர்களின், சட்டவிரோத மற்றும் வன்முறை நடவடிக்கைகள் குறித்த விபரங்களை இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சலுகையை, ஹார்வர்டு பல்கலை இழக்க நேரிடும் என்றும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் செயல்பாடுகளுக்கு, இப்பல்கலை தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், அதன் வரிவிலக்கு அந்தஸ்து ரத்தாகும் என்றும், அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இதை பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்பாடாகவே, அதிபர் டிரம்ப் நிர்வாகம் பார்க்கிறது. அதனால் தான், வெளிநாட்டு போராட்டக்காரர்களை நாடு கடத்துவது, விசா இன்றியும், விசா காலத்தை தாண்டியும் தங்கியிருப்போரை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைளை அதிபர் டிரம்ப் எடுத்து வருகிறார்.
ஆனாலும், பாலஸ்தீனத்திற்கு எதிரான, அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலை திருப்திபடுத்தவும், அமெரிக்காவில் செல்வாக்கு மிக்கவர்களாக திகழும் யூதர்களின் லாபியை திருப்திபடுத்தவுமே, இத்தகைய நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
பயங்கரவாதத்தையும், அதற்கு ஆதரவான செயல்பாடுகளையும் தடுப்பது முக்கியமானது என்றாலும், முதன்மையான பல்கலைகளுக்கு எதிரான மிரட்டல் தந்திரங்களை அதிபர் டிரம்ப் பயன்படுத்துவது சரியானதல்ல. சுமுகமான முறையில் இப்பிரச்னையை கையாண்டு, பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களில் நடக்காமல் தடுக்க வேண்டும்.
அதற்கு மாறாக டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்தால், சர்வதேச மாணவர்கள் உயர்கல்வி கற்க செல்ல சிறந்த நாடு என்ற அந்தஸ்தை, அமெரிக்கா இழக்க நேரிடும். அத்துடன் கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தை முடக்குவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும்
-
மது, குட்கா விற்பனை 6 பேர் கைது
-
பிற துறைகளின் திட்டங்களுக்காக 685 ஏக்கர் வன நிலம் விடுவிப்பு: வனத்துறை நடவடிக்கை
-
சிறிய பள்ளிகளை நோக்கி ஆசிரியர்கள். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி
-
கழிவுநீர் கலந்த குடிநீரால் மூவர் இறப்பு; ஆய்வுக்கு சென்ற மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம்
-
சூறாவளியுடன் மழை பெயர் பலகைகள் சேதம்
-
14வது மாடியில் இருந்து விழுந்து மூதாட்டி மரணம்