கழிவுநீர் கலந்த குடிநீரால் மூவர் இறப்பு; ஆய்வுக்கு சென்ற மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருச்சி : திருச்சியில், கழிவுநீர் கலந்து வந்த குடிநீரால், குழந்தை இறந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் ஆய்வுக்கு சென்ற மேயரை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, உறையூரில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெருவில் ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கலான குடிநீர் வந்துள்ளது. அந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர், திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், நான்கரை வயது குழந்தை பிரியங்கா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த மருதாம்பாள், 80, லதா, 55, ஆகியோரும் உடல்நலக் குறைவால் இறந்துள்ளனர். இதனால், அவர்களும் குடிநீர் பிரச்னையில் தான் இறந்து விட்டனர் எனக்கூறி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முதல் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தை பிரியங்கா இறந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மதியம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே நேரம், அப்பகுதியில் குடிநீரில் பிரச்னை இல்லை என்றும், திருவிழாக்களில் வழங்கப்படும் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட பானங்களால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி கமிஷனர் சரவணன் நேற்று முன்தினம் செய்திக்குறிப்பு வெளியிட்டார்.
இது அப்பகுதி மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இந்த விளக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உறையூர் பகுதி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் மேற்கு தொகுதியில் உள்ளது.
இங்கு, 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிந்தும், நேற்று அப்பகுதிக்கு தண்ணீர் பந்தல் திறக்க வந்த அமைச்சர் நேரு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மின்னப்பன் தெருவில் இறந்த சிறுமியின் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அஞ்சலி செலுத்திய மாநகராட்சி மேயர் அன்பழகன், அப்பகுதியில் ஆய்வுக்கு சென்றார். அப்போது, அப்பகுதி மக்கள், மேயருக்கு வழிவிடாமல், வழிமறித்து ரோட்டில் அமர்ந்து, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயரும் சத்தமாக பேச அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், மேயர் அங்கிருந்து புறப்பட்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இப்பகுதியில் திருவிழாக்கள் நடப்பதால் அன்னதானம், நீர்மோர் போன்ற பானங்களை குடித்ததால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இருந்தாலும், குடிநீரில் பிரச்னை உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.
மருத்துவமனையில், 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிறுமி இறந்தது குடிநீர் பிரச்னையிலா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் தெரிய வரும். காந்தி மார்க்கெட் பகுதியில் இப்பிரச்னை வந்தபோது, குடிநீரில் கழிவுநீர் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டது.
இங்கும் அதுபோல் உள்ளதா என்று பார்க்கும் வரை, லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இப்பகுதியினர் மாநகராட்சி பொறியாளரிடம் புகார் அளித்ததாக கூறுகின்றனர். என்னிடம் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு