பிற துறைகளின் திட்டங்களுக்காக 685 ஏக்கர் வன நிலம் விடுவிப்பு: வனத்துறை நடவடிக்கை

சென்னை : 'தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில், பிற துறைகளின் திட்டங்களுக்காக, 685 ஏக்கர் வன நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன' என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, பசுமை தமிழகம் இயக்கம் துவக்கப்பட்டு, மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், யானை, புலிகள் எண்ணிக்கை, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு தேவையான வாழ்விட பரப்பளவு விரிவடைவதால், அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே, அடர்ந்த வனங்களின் அருகேயுள்ள நிலங்களை வனமாக மேம்படுத்தி, புதிய காப்புக்காடுகளை அறிவிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில், 15 இடங்களில் புதிய காப்புக்காடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு புதிய காப்புக்காடுகளால் வனப்பரப்பு அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் காப்புக்காடுகள், பிற துறை திட்டங்களுக்கும் ஒதுக்கீடும் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

வன நிலங்களை, பிற பணிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக, 2006ல் நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டப்படி, புதிய விதிகள் வகுக்கப்பட்டன. இந்த விதிகளால், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, வன நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன.

கிராம சாலைகள், பள்ளிக் கட்டடம், குடிநீர் வசதி, சமுதாய கூடம், ரேஷன் கடை, மின்சார வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, புதிய சட்டத்தின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில், 685 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில், புதிய காப்புக்காடுகள் அறிவிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வனம் சார்ந்து வாழும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் வைத்து, வனநிலம் வழங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement