சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'ஆட்டோ பிரீபெய்டு' திட்டம் தொய்வு

சென்னை:சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்களில், தினமும் பல லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

பகல் நேரங்களில் வருவோர், நகரின் பிற பகுதிகளுக்குச் செல்ல, மாநகர பேருந்து அல்லது மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இதுவே, இரவு மற்றும் அதிகாலையில் குடும்பத்தோடு வருவோர், ஆட்டோ, கால்டாக்சிகளில் பயணிக்க விரும்புகின்றனர்.

அவர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பிரீபெய்டு ஆட்டோக்கள் முழு அளவில் செயல்படாமல் இருக்கின்றன. அதேநேரம், பயணியர் நுழைவு பகுதிகளுக்கு வந்தவுடனேயே, அவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசுகின்றனர்.

மேலும், செயலி வாயிலாக புக் செய்யும் வாடகை வாகன ஓட்டிகள், நிலையத்திற்கு உள்ளே வர தயங்குகின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநர்களால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், லட்சக்கணக்கானோர் வருகின்றனர். ஆனால், ஆட்டோ, கால்டாக்சிகளில் நியாயமான கட்டணத்தில் பயணிக்க முடியவில்லை.

ஆட்டோ பிரீபெய்டு மையங்கள் காட்சி பொருளாகவே உள்ளன. அங்கு வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆரம்ப கட்டணமே 300, 400 ரூபாய் என கேட்கின்றனர்.

இதனால், பயணியர் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement