பக்தர்களுக்கு இடையூறின்றி மேம்பால கட்டுமான பொருட்களை அகற்ற ஏற்பாடு கோரிப்பாளையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் தகவல்

மதுரை: 'அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு முன் பக்தர்களுக்கு இடையூறின்றி கட்டுமான பொருட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக' அமைச்சர் வேலு தெரிவித்தார்.

மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்.29ல் துவங்கி மே 17 வரை நடக்கிறது. இதில் வைகையில் இறங்கும் நிகழ்வின் போது, கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடப்பதால் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மூர்த்தி, தியாகராஜன் ஆய்வு செய்தனர். அவர்களுடன் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி சென்றனர்.

பின்னர் அமைச்சர் வேலு கூறியதாவது: மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதி உள்ளது. எனவே, மே 12ல் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு முன்பு, கட்டுமான பொருட்களை அகற்றும்படி முதல்வர் உத்தரவிட்டார்.

எனவே அமைச்சர்கள் இப்பகுதிகளை ஆய்வு செய்தோம். பக்தர்கள் பாதுகாப்பு கருதி மே 10ம் தேதிக்குள் இங்கிருக்கும் அனைத்துப் பொருட்களையும் அகற்ற வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் முட்புதர்களை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மேலமடை சந்திப்பு பாலத்தில் 75 சதவீதம், கோரிப்பாளையத்தில் 65 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கோரிப்பாளையம் பாலத்திற்கு நிலஎடுப்பு பணிகள் தொடர்பாக அமெரிக்கன் கல்லுாரி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றது. தற்போது இழப்பீடு பெறும் நிலையில் உள்ளனர். பணிகள் தொய்வின்றி நடப்பதால், டிசம்பருக்குள் பணி முடித்துவிடும் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

இங்கு பத்து லட்சம் மக்கள் கூடுவர் என்பதால் மக்களை பாதுகாப்பது போலீசின் கடமை. அவர்களுக்கு கெடுபிடியாக பக்தர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. திருவிழா நேரத்தில் உணவு வழங்குவதில் கட்டுப்பாடு உள்ளது. எந்த இடத்திலும் எந்த உணவையும் வழங்கலாம் என்றால் பக்தர்களின் உடல்நலம் கெட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடத்தில் வழங்க கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement