போலீஸ் செய்திகள்...

நண்பர் மீது தாக்குதல்தடுத்தவர் கொலை

வாடிப்பட்டி: மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெரு பாலமுருகன் மகன் சரவணபாண்டி 23, பால்ஸ் சீலிங் பணிகள் செய்து வந்தார். இவர்மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு உள்ளது. இவர் சில நாட்களாக வாடிப்பட்டி ஆண்டிபட்டி இந்திரா காலனியில் நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை அதேபகுதி நண்பர் மோகன்ராஜூடன் அங்குள்ள துணை சுகாதார நிலையம் அருகே அமர்ந்து பேசினார்.

அங்கு வந்த வினோத்குமார், மதுபாலாஜி, பாலமுருகன், மணிகண்டன், மோகன்ராஜை தாக்கினர். அவர்களைத் தடுத்த சரவண பாண்டியையும் தாக்கினர். இதில் சரவணபாண்டி இறந்தார். காயமடைந்த மோகன்ராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இருமாதங்களுக்கு முன் மோகன்ராஜை, தங்கள் தெரு வழியாக வரக்கூடாது என வினோத்குமார் தடுத்தபோது தாக்கிக் கொண்டனர். இந்த முன்விரோதம் கொலையில் முடிந்துள்ளது. தப்பியவர்களை வாடிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

ஓடைக்குள்ஆண் பிணம்

எழுமலை: பாறைப்பட்டி பகுதியில் இருந்து மானுாத்து கண்மாய் செல்லும் ஓடைக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் விசாரணையில் பச்சை நிறத்தில் வேட்டியுடன் கிடந்த பிணத்தின் அருகே நீல நிறச் சட்டை, நீலம், வெள்ளை கட்டம் போட்ட துண்டு, பாதி குடித்த நிலையில் குளிர்பான பாட்டில், கடலை பருப்பு பாக்கெட் கிடந்துள்ளன. அவர் யார், எதற்காக இந்தபகுதிக்கு வந்தார், எப்படி இறந்தார் என எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

கிராவல் மண் லாரிகள் பறிமுதல்

சோழவந்தான்: மன்னாடிமங்கலம் அருகே காடுபட்டி எஸ்.எஸ்.ஐ., சேர்வை மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வேறு பகுதிக்காண அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்தியது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்து, டிரைவர்கள் சக்கரப்பநாயக்கன்பட்டி வீர விஷ்ணு 28, பூதிப்புரம் விஜயகுமாரை 40 கைது செய்தனர்.

வீட்டில் நகைகள் மாயம்

சோழவந்தான்: முதலியார் கோட்டை அழகு பாண்டி 36, லோடுமேன். மனைவி நிவேதா 30, நேற்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல பீரோவில் இருந்த நகையை எடுக்க சென்றபோது. அங்கிருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.13,000 மாயமானது தெரிந்தது. பீரோ உடைக்கப்படாமல் பணம் மாயமானது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement