அக்னிவீர் திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் 22ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்கள் தேர்வுக்கான சிறப்பு பதிவு முகாம் புதுச்சேரியில் வரும் 22ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 25 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.

அதனை நிரப்புவதற்கான, விண்ணப்பங்களை பதிவு செய்ய கடந்த 10ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட இருந்தது. இந்நிலையில் இளைஞர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, புதுச்சேரியை சேர்ந்த அனைத்து தகுதியான இளைஞர்களும் அக்னிவீர் திட்டத்தில் இணையும் வகையில் இணையதளத்தில் பதிவு செய்வது மற்றும் அக்னி பாத் திட்ட விழிப்புணர்வு முகாம் வரும் 22ம் தேதி காலை 10.00 மணிக்கு தாகூர் கலைக் கல்லுாரியில் நடக்கிறது. மேலும், வரும் 25ம் தேதி வரை அந்தந்த பகுதி கல்லுாரிகளிலும் பதிவு முகாம் நடக்கிறது. ஆகையால், தகுதி வாய்ந்த நபர்கள் அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்க ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விளையாட்டு மற்றும் என்.சி.சி. சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு www.joinindianarmy.nic. in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement