பா.ஜ., கூட்டணிக்கு எதிராக என்.ஆர்.காங் போர்க்கொடி: தாமரையை கழற்றிவிட யோசிக்கிறது 'ஜக்கு'

புதுச்சேரி: பா.ஜ., கூட்டணிக்கு எதிராக என்.ஆர்.காங்., போர்க்கொடி உயர்த்தியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் தனித்து நின்றுகளம் காணுவோம் என குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., 10, பா.ஜ., 6 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். கூட்டணி ஆட்சி நான்கு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் இருகட்சிகளும் அடுத்தடுத்து மாநில நிர்வாகிகளை நியமித்து சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இது போன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்ட ணியை பா.ஜ., உறுதி செய்துவிட்ட சூழ்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் எந்த பயனும் இல்லை. தனித்து களம் காணுவோம். மீண்டும் ஆட்சியை பிடிப்போம். நல்ல முடிவு எடுங்கள் என முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனம் குமுறி வருகின்றனர்.
மன குமுறலில் இருக்கும் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
மத்தியில் பா.ஜ., கூட்டணி உள்ள சூழ்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி நினைக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாநில அந்தஸ்திற்காக என்.ஆர்.காங்., உதயமானது. முதல்வரின் முதல் கோரிக்கையாகவும் இது இருக்கிறது.
இது போன்ற முக்கிய பிரச்னைகளில் எது கேட்டாலும் இல்லை என்றே பதில் வருகிறது. இதேபோல் நிதி கமிஷனில் சேர்க்க சொன்னோம். மத்தியில் இணக்கமான ஆட்சி இருந்தும் சேர்க்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி பா.ஜ., கூட்டணியுடன் மக்களை சந்திக்க முடியும்.
இதேபோல் அதிகாரிகள் ஒத்துழைப்பு கூட்டணி அரசுக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த முடியும். ஆனால் புதுச்சேரியில் எல்லாமே தலைகீழாக உள்ளது. அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது.
வேகமான நிர்வாகத்திற்கு நமக்கு ஒத்துழைக்கும் ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ்., அதிகாரிகள் முக்கிய பதவிகளில் இருக்க வேண்டும். அவர்களை கூட முதல்வரால் தனக்கு பிடித்த மாதிரி நியமிக்க முடியவில்லை.
அண்மையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை இடமாற்றம் செய்தபோது கூட முதல்வரை கலந்து ஆலோசிக்கவில்லை. தன்னிச்சையாக தலைமை செயலரே அதிகாரிகளை மாற்றுகிறார். பொறுப்புகளை கொடுக்கிறார். அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளிக்கிறார்.
இதனை கூட்டணியில் உள்ள பா.ஜ., மவுனமாக பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம். இது தான் கூட்டணி தர்மமா?
வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., தனித்து நின்றால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். எனவே தேவையில்லாத லக்கேைஐ இறக்கிவிட்டு, தனியாகவே நிற்க வேண்டும். இதனை நேரடியாக முதல்வரிடமே சொல்லிவிட்டோம்' என்றனர் ஆதங்கத்துடன்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வேண்டாம் என என்.ஆர்.காங்., நிர்வாகிகள் தொண்டர்கள் வலியுறுத்தி வந்தாலும், அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொள்ளும் முதல்வர் ரங்கசாமி எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றார். இதனை காணும், 'ஜக்கு' தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.
ரங்கசாமியின் மனது அந்த அப்பா பைத்திய சாமிக்கு தான் வெளிச்சம். அப்பா பைத்திய சுவாமிகள் தான் எங்களுக்கு நல் வழியை காட்ட வேண்டும் என்று எல்லாம் புலம்பி வருகின்றனர்.
மாநில நிர்வாகிகள் புதிததாக நியமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அடுத்து ஒவ்வொரு அணிகளாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தாமரை வேண்டாம்; ஜக்கு ஒன்றே போதும் தீர்மானமாக உரத்த குரலில் ஒலிக்க முடிவு செய்துள்ளனர்.