தமிழக உரிமை காக்க போராடும் முதல்வர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேச்சு

செஞ்சி: 'தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் போராடி வருகிறார்' என மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.
செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆறுமுகம், குமார், அனுசுயா மணிபாலன், இக்பால், கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் லட்சுமி சுப்ரமணியம் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை துவக்க உரையாற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை ஜான் சாதனைகளை விளக்கி பேசினார்.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கடந்த 4 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க., அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ளது. முதல்வர் விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை என தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும், சொல்லாத திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
நுாறு நாள் வேலை திட்ட நிதி, கல்விக்கான நிதியையும் மத்திய அரசு நிறுத்தி விட்டது. அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி தமிழகத்திற்கு மிகப்பெரும் துரோகத்தை செய்து பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மோடியை தட்டி கேட்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும், பெற்று தரவும் போராடி வருகிறார்' என்றார்.
கூட்டத்தில், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் விஜயராகவன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் கணேசன், பேரூராட்சி தலைவர்கள் மொக்தியார், முருகன், ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், மாணவர் அணி அமைப்பாளர் பிரசன்னா பங்கேற்றனர்.