சமையல் உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 288 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை விபரம் அந்தந்த வட்டார அலுவலகங்களில், இன சுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.

சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு, ஒர் ஆண்டு பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில், 3000 முதல் 9000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயது பெண்கள் மட்டுமே விணணப்பிக்கலாம். வயது நிர்ணயம், அறிவிப்பு தேதி அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். விண்ணப்பதாரரின் வீடு 3 கி.மீ., துாரத்திற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 28ம் தேதி ஆகும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஜாதிச்சான்று நகல் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின்போது, அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement