தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மண்; விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!

சேதமடைந்த மின்கம்பம்
வால்பாறையில், தனியார் மருந்து கடை அருகே ரோட்டோரம் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் கீழே விழும் நிலையில் உள்ளதால் மின் கம்பத்தை மின்வாரியத்தினர் கவனித்து உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.
-- துளசி, வால்பாறை.
ரோட்டில் மண் குவியல்
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி, சந்திராபுரம் பிரிவு முதல் செல்லப்பம்பாளையம் பிரிவு வரை தேசிய நெடுஞ்சாலையில், வலது புறத்தில் மழையினால் அடித்து வரப்பட்ட மண் தேங்கி நிற்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த மண் குவியலை உடனடியாக அகற்ற வேண்டும்.
--- மகேஸ்வரன், ஊஞ்சவேலாம்பட்டி.
தாமதமாக வரும் பஸ்கள்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், ஒரு சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் காலையில் குறித்த நேரத்திற்கு வராமல், காலதாமதமாக வருவதால் பயணியருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் பயணியர் சரியான நேரத்திற்கு உரிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பாரதி, பொள்ளாச்சி.
ரோட்டில் வீணாகும் குடிநீர்
தேவனாம்பாளையத்தில் இருந்து, நெகமம் செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. குடிநீர் வீணாவது அதிகரித்து வருகிறது. எனவே, இதை ஊராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.
-- அனிதா, நெகமம்.
தெருநாய் தொல்லை
கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் அரசு பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் அதிக அளவு தெருநாய்கள் இருப்பதால், அப்பகுதிக்கு வரும் மக்கள் மற்றும் அவ்வழியாக பைக்கில் செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பிரகாஷ், கிணத்துக்கடவு.
சரிசெய்ய வேண்டும்
உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை -- பழநி ரோட்டில், தனியார் பள்ளி அருகில் பள்ளம் காணப்படுகிறது. பெரிய வாகனங்கள் அந்த வழியாக செல்லும் போது பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ள. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய வேண்டும்.
- பொதுமக்கள், குறிச்சிக்கோட்டை.
பிளாஸ்டிக் கழிவுகள்
உடுமலை, பள்ளபாளையம் ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் அவை உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
- பால்ராஜ், பள்ளபாளையம்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சரவணா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. வாகன ஓட்டுநர்கள் வழியை மறித்து நிறுத்துவதால் பொதுமக்கள் அவ்வழியாக சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். மற்ற வாகனங்கள் செல்வதற்கும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- ராகவேந்தர், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, ராஜேஸ்வரி லே-அவுட்டில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. வீதி முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதால் குழந்தைகளை மாலையில் வெளியில் விடுவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். இரவில் அப்பகுதியில் திருட்டு பயமும் ஏற்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- திருமுருகன், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, ஆசாத் வீதியில் குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் தீயிட்டு எரிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே இவ்வாறு கழிவுகளை எரிப்பதால் அதிகமாக புகையும் பரவுகிறது. முதியவர்கள், குழந்தைகளுக்கு இதனால் பாதிப்புகளும் அதிகரிக்கிறது.
- சந்தியா, உடுமலை.
விபத்து ஏற்படும் அபாயம்
உடுமலை - பழநி ரோட்டின் ஓரம், கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நடராஜன், உடுமலை.
மேலும்
-
கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு
-
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
-
கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு
-
கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
-
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்
-
லாட்டரி விற்ற 2 பேர் கைது