பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை ஊக்கத்தொகை

அன்னுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பால் உற்பத்தியாளர்களுக்கு, நிலுவை ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ஆவினுக்கு, தமிழகத்தில், தினமும் 35 லட்சம் லிட்டர் பாலை, பால் உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு, ஆவினுக்கு வழங்கும் பாலுக்கு, ஊக்கத் தொகையாக, ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவித்தது. 10 நாட்களுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் மாதம் ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட பாலுக்கு, அடுத்த மாதம் 7ம் தேதி ஒரு லிட்டருக்கு, மூன்று ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. மார்ச் மாதம், ஆவினுக்கு பால் உற்பத்தியாளர்கள் வழங்கிய பாலுக்கு, ஏப்ரல் 18ம் தேதி வரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் (19ம் தேதி) செய்தி வெளியானது. இதையடுத்து அன்று மாலை பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

'ஒவ்வொரு மாதமும் 7ம் தேதிக்குள் முந்தைய மாத ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்,' என ஆவினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement