மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அரசு மருத்துவமனை கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் அடுத்த மழவராயனுாரை சேர்ந்தவர்கள் சிவபாலன், 23; மதன், 23; ஆகாஷ், 20; இவர்கள், விருத்தாசலம் அடுத்த கோனான்குப்பம் ஆலய தேர் திருவிழாவில் கலந்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். கோனான்குப்பம் அருகே வந்தபோது, டெம்போ மோதியதில் மூவரும் படுகாயம் அடைந்து, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிவபாலன் மற்றும் மதன் ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர்ந்து ஆகாஷை வென்டிலேட்டர் பொருத்திய, 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறி ஆகாஷின் உறவினர் திருவெண்ணைநல்லூர் அடுத்த மழவராயனூரை சேர்ந்த முருகன் மகன் அப்பாஸ், 19; இரவு 10:30 மணியளவில் அரசு மருத்துவமனையில் டேபிள் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.
உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அப்பாஸை கைது செய்தனர்.