மீண்டும் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 'இஸ்ரோ'

பெங்களூரு, :'ஸ்பேஸ் டாக்கிங்' பரிசோதனை திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை, 'இஸ்ரோ' வெற்றிகரமாக இணைத்துள்ளது.

வரும் 2035க்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.

அதற்கு முன்னோட்டமாக, 'ஸ்பேடெக்ஸ்' என்ற திட்டத்தில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி., சி -- 60 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 2024 டிச., 30ல் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், கடந்த ஜன., 16ல் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன.

இதன் வாயிலாக, 'ஸ்பேஸ் டாக்கிங்' தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட நான்காவது நாடு என்ற பெருமையை நம் நாடு அடைந்தது.

ஒருங்கிணைப்பு நடந்த இரு மாதங்களுக்கு பின், இரண்டு செயற்கைக்கோள்களும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், 'ஸ்பேஸ் டாக்கிங்' திட்டத்தின் கீழ், விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக இணைத்து உள்ளது.

Advertisement