'தங்கத்தின் விலை குறையாது சிறுக சிறுக சேமிப்பதே நல்லது'

கோவை: “தங்கத்தின் விலையில் சிறிது குறைந்து நிலைபெறுமே தவிர, சரியாது,” என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஆடிட்டர் கார்த்திகேயன் கூறியதாவது:
கடந்த 2009 டிச.,ல் 10,800 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம், 2019 டிச.,ல் 31,560 ரூபாய்; 2024 டிச.,ல் 56,800 ரூபாய்; தற்போது, 71,600 ரூபாயாக உள்ளது. ஒரே ஆண்டில் 27 சதவீதமும், கடந்த மூன்று மாதங்களில் 17 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகள் மீது, பதிலீட்டு வரி விதித்துள்ளார். இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முனைப்பில் டிரம்ப் உள்ளார்.
இந்நடவடிக்கைகளால் அமெரிக்காவில் விலைவாசி உயரும், பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள், தங்கத்தை அதிகம் வாங்கி, இருப்பு வைக்கத் துவங்கியுள்ளன. இதனால், தங்கத்துக்கான தேவை அதிகரித்து, விலை அதிகரிக்கிறது.
விலை குறையுமா?
கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. 2011 - 2014 காலகட்டத்தில் மட்டும் குறைந்து மீண்டும் உயர்ந்தது. சில நிபுணர்கள், 37 சதவீதம் வரை குறையும் என, கணித்துஉள்ளனர். ஆனால், அது ஒரேயடியாக இருக்காது.
ஒருகட்டத்தில், பொருளாதார நிலைத்தன்மை உறுதியாகும் நிலையில், சில நாடுகள் கையிருப்பு தங்கத்தை, டன் கணக்கில் விற்பனை செய்யும். அப்போது, தங்கத்தின் விலையில் சற்று தொய்வு ஏற்படும்; குறையும். ஆனால், அது நிரந்தரமாகக் குறைவதற்கு வாய்ப்பில்லை.
தங்கத்தில் முதலீடு
இந்தியாவில் தங்கம் என்பது முதலீடு என்பதையும் தாண்டி, கலாசார தொடர்புடையது. எனவே, நம் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள். வாங்கும் அளவு வேண்டுமானால் குறையும். 24 காரட்டுக்குப் பதில், 22 காரட் தங்கத்தைத் தேர்வு செய்வர். ஆனால், தங்கத்தில் முதலீட்டை தவிர்க்க மாட்டார்கள்.
உலோகத் தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பதில், இ.டி.எப்., போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அல்லது எஸ்.ஐ.பி., வாங்குவதைப் போல, தங்கத்தின் விலை சற்று குறையும்போது, மாதாமாதம் அதற்கு ஏற்ப கையிலிருக்கும் பணத்துக்கு, தங்கத்தை வாங்கிச் சேமிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது