வாகன ஓட்டிகளை சுற்றவிடும் 3 மேம்பாலங்கள் கிளாம்பாக்கம் அருகே திணறுகிறது 'கூகுள் மேப்' குழப்பம்

கிளாம்பாக்கம், செங்கல்பட்டிலிருந்து சென்னை, தாம்பரம் நோக்கி புதிதாக வரும் வாகன ஓட்டிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் அடுத்தடுத்து உள்ள மேம்பாலங்களால் தடுமாறுகின்றனர். இந்த இடத்தில்,'கூகுள்' வரைபடமும் சரியாக வழிகாட்டாததால், தினமும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வண்டலுார் கிராமத்திற்குள்ளும், வண்டலுார் வெளிவட்ட சாலையிலும் பயணித்து, படாதபாடுபடுகின்றனர்.
சென்னையின் பிரதான வழித்தடமாக, செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான ஜி.எஸ்.டி., சாலை உள்ளது.
இதில், புதிதாக சென்னைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு, செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரையிலான 24 கி.மீ., துார சாலையில், எவ்வித குழப்பமும் இருக்காது.
ஆனால், ஊரப்பாக்கம் அடுத்து ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே வந்தவுடன், இடது பக்கம் உள்ள பாலத்தில் செல்வதா, வலது பக்கம் உள்ள மேம்பாலத்தில் செல்வதா அல்லது இரண்டு பாலத்திற்கும் நடுவே உள்ள சாலையில் செல்வதா என்ற குழப்பம் வருகிறது.
இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில், தாம்பரம் நோக்கிச் செல்வோர் எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டி பலகை, இவ்விடத்தில் அமைக்கப்படவில்லை.
தவிர, 'கூகுள்' வரைபடமும் இந்த இடத்தில் திணறுகிறது.
இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் வழியாக சென்னை மாநகருக்குள் வர விரும்பும் புதிய வாகன ஓட்டிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே வந்த உடன், கடும் குழப்பத்தை சந்திக்கின்றனர்.
இதில், சிலர் தவறுதலாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, இடது பக்கம் உள்ள பாலத்தில் பயணிக்கின்றனர்.
ஆனால், 500 மீ., துாரம் அந்த பாலத்தில் சென்ற பின், வண்டலுார் கிராமத்திற்குள் புகுந்து, அங்கு திக்கித் திணறி, சந்துகளுக்குள் புகுந்து தடுமாறுகின்றனர்.
அதன் பின் சுதாரித்து, மீண்டும் அதே பாலத்தில் 'யு - டர்ன்' செய்து, ஜி.எஸ்.டி., சாலைக்கு மீண்டும் வந்து, தாம்பரம் நோக்கி பயணிக்கும் போது, அடுத்த 100 மீ., துாரத்தில் மீண்டும் ஒரு குழப்பம் வருகிறது.
அதாவது, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பு தாண்டியதும், இடது பக்கம் ஒரு சாலை, வலது பக்கம் ஒரு மேம்பாலம் வருகிறது.
இதில், இடது பக்கம் உள்ள சாலை, தாம்பரம் நோக்கிச் செல்கிறது. வலது பக்கம் உள்ள மேம்பாலம் வண்டலுார் - மீஞ்சூர் நோக்கிச் செல்லும் வெளிவட்ட சாலையாக உள்ளது.
இந்த இடத்திலும் கூகுள் வரைபடம் திணறுவதால், பல வாகன ஓட்டிகள், வண்டலுாரிலிருந்து மீஞ்சூர் செல்லும் வலது பக்க பாலத்தில் ஏறி பயணிக்கின்றனர்.
அடுத்த 10 நிமிட பயணத்திற்குப் பின் சுதாரித்து, பெரும் குழப்பத்திற்கு ஆளாகி, அதே வழியில் திரும்பி, தாம்பரம் செல்வதற்குள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த குழப்பங்களை தீர்க்க, வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெரியும்படி, பெரிய அளவிலான வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே சாலையும் பிரிந்து, மேம்பாலங்களும் அடுத்தடுத்து வருவதால், புதிதாக தாம்பரம் நோக்கிச் செல்வோருக்கு பெரும் குழப்பம் வருகிறது. இந்த குழப்பத்தை தீர்க்க கூகுள் வரைபடத்தை பார்த்தால், அதுவும் குழப்பத்தை தருகிறது.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே இடது பக்கம், வண்டலுார் கிராமத்திற்குள் செல்லும் மேம்பாலத்தில், இரவிலும் நன்றாக தெரியும்படி, ஒரு வழிகாட்டி பலகை, பெரிய அளவில் வைக்க வேண்டும்.
அதே இடத்தில், வலது பக்கம் உள்ள மேம்பாலத்திலும், இரண்டு பாலங்களுக்கும் நடுவே செல்லும் ஜி.எஸ்.டி., சாலையிலும் பெரிய அளவிலான வழிகாட்டி பலகை நிறுவ வேண்டும்.
வண்டலுார்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை துவங்கும் இடத்தில், தாம்பரம் செல்வோர் இடது பக்கம் உள்ள சாலையில் பயணிக்கவும். வலது பக்கம் உள்ள பாலத்தில் செல்லக் கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.
தவிர, கவனக் குறைவாக வழி தவறி செல்வோர், உடனடியாக சுதாரிக்கும்படி, ஒவ்வொரு பாலத்திலும், 100 மீ., துாரத்திற்குள், அந்த சாலை எங்கே செல்கிறது என்ற அறிவிப்பு பலகையும் பெரிய அளவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
'தங்கத்தின் விலை குறையாது சிறுக சிறுக சேமிப்பதே நல்லது'
-
1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம்: மோடி
-
அன்று இனித்தது; இன்று கசக்கிறதா? முதல்வருக்கு பழனிசாமி கேள்வி
-
தேர்தல் வழக்கு நவாஸ்கனி மனு தள்ளுபடி
-
கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சென்னைக்கு மாற்றம்
-
கோவில்களில் 85 திருமண மண்டபங்கள்: அமைச்சர் சேகர்பாபு