தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கு மாணிக்கம் தாகூர் மனு தள்ளுபடி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'மாணிக்கம் தாகூர், தன் வேட்புமனுவில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, அவர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரி, மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், மாணிக்கம் தாகூர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் அமர்வில் நேற்று வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கூடிய பிரதான வழக்கு, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில், நாங்கள் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, இந்த விவகாரத்தில் ஏதேனும் கோரிக்கை இருந்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாடலாம்; அவ்வாறு நாடும்பட்சத்தில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உயர் நீதிமன்றம் அந்த மனுக்களை பரிசீலிக்கலாம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

மேலும்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது
-
ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி
-
ஜே.சி.பி., நிறுத்திய தகராறு அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் மகன் கைது