மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது: ரகுபதி

சென்னை : ''அரசியலமைப்பு சட்டப்படி, அவரவர் உரிமையை பாதுகாக்க முடியும். எந்த சட்டத்தின் வாயிலாகவும் மூட நம்பிக்கை அல்லது மத நம்பிக்கையை தடுப்பது இயலாத காரியம்,'' என, சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார்.

சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: வேதாரண்யத்தில் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஒரே கட்டடத்தில் இயங்குகிறது. போதிய இடவசதி அங்கு உள்ளது. இரண்டையும் தனித்தனியாக அமைத்துத் தர வேண்டும். ஆறு மாதமாக பொறுப்பு மாஜிஸ்திரேட் தலைமையில், நீதிமன்றம் இயங்குகிறது.

அமைச்சர் ரகுபதி: உயர் நீதிமன்றம் மற்றும் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின்படி மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் காலி பணியிடங்கள் ஏற்படுவதால், ஒரே மாஜிஸ்திரேட் இரண்டு நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். வேதாரண்யத்தில் தனித்தனியாக நீதிமன்றம் அமைப்பது, உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளது. நிதித்துறை அனுமதியைப் பெற்று, அதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

தி.மு.க., - எழிலன்: அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதற்கு, மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு தனிச்சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்.

அமைச்சர் ரகுபதி: மக்கள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். அது மூடநம்பிக்கையாக இருக்கலாம் அல்லது மத நம்பிக்கையாக இருக்கலாம். அரசியல் அமைப்பு சட்டப்படி அவரவர் உரிமையை பாதுகாக்க முடியும்.

எந்த சட்டத்தின் வாயிலாகவும் எதையும் கொண்டு வந்து, ஒன்றை தடுப்பது அல்லது ஒன்றை பாதுகாப்பது இயலாத காரியமாக போய்விடும்.

நம் கொள்கையை நாம் பின்பற்றலாம்; தவறு கிடையாது. மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற முயற்சி ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்குமா என்பதை பார்த்துதான் சொல்ல வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: சம்பந்தமில்லாத கேள்வியை, எம்.எல்.ஏ., கேட்டு விட்டார். இருப்பினும், அதற்கு அமைச்சர் நல்ல விளக்கம் தந்துள்ளார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement