நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்ற வேண்டும்: நயினார்

சென்னை : 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:



கோவை, திருப்பூர் மாவட்டங்கள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நெசவை மையத் தொழிலாக கொண்டு இயங்குகின்றன. பல லட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், தேசத்தின் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு உழைத்து வருகின்றன.

கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை, விசைத்தறியாளர்கள் வலியுறுத்தினர்; எந்த பலனும் கிடைக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களோடு, தமிழக பா.ஜ., துணை நிற்கிறது என்று அறிந்த அடுத்த 24 மணி நேரத்தில், விசைத்தறியாளர்களின் முதல்கட்ட கோரிக்கைகளுக்கு, அரசு செவிமடுத்துள்ளது. அம்மக்களுக்கும், அவர்களுடன் துணைநின்ற பா.ஜ.,விற்கும் கிடைத்த வெற்றி. ஆரம்பத்திலேயே துறை அமைச்சர்கள், உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று, போராட்டத்தை வாபஸ் பெற வைத்திருக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால், ஒரு மாதப் போராட்டம், அதனால் வந்த இழப்புகளையும், விசைத்தறியாளர்கள் சந்தித்த மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், உழைக்கும் மக்கள் பிரச்னைகளை புறக்கணிக்கும் விதமாகவே, அரசு தொடர்ந்து நடக்கிறது.

அதே அணுகுமுறையையே விசைத்தறியாளர்கள் விவகாரத்திலும் கடைப்பிடித்தது. நெசவாளர்களுக்கு தி.மு.க., அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக, நெசவாளர்களுக்கான தனி கூட்டுறவு வங்கி; தடையின்றி நுால் கிடைக்கும் வகையில் அரசு கொள்முதல் நிலையங்கள்; கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி, 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு; உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement